அன்னையே! ***************** என் அன்னைக்கூட என்னை ஒன்பது மாதங்கள்தான் சுமந்தாள் பாகியாத் அன்னையே! நீ என்னை ஒன்பது வருடங்கள் சுமந்தாய் ! ஒன்பது மாத கருவறைச் சிறையால் உலகம் அறிந்தேன் ! ஒன்பது வருட கருவறைச் சிறையால் மறுமைப் புரிந்தேன். என் தாயோ அமுதூட்டினாள் நீயோ அறிஊட்டினாய் ! அறிவிலியாய் வந்தேன் அறிவாளியாக்கினாய் ஆதங்கமாய் வந்தேன் ஆனந்தமாக்கினாய்! இம்மையில் சுழன்றேன் இனம் காட்டினாய் ! ஈருலக வாழ்வுக்கு ஈமான் ஒளியேற்றினாய் ! உன்மத்தார் கூட்டம்ஒழிக்க உசுப்பேற்றினாய் ! ஊர்பேசும் அளவுக்கு உயிரூட்டினாய்! எண்ணங்கள்வடிவம்பெற எடுத்தோதினாய் ! ஏந்தல்நபி வழிசெல்ல ஏணியானாய் ! ஐவேளைத் தொழுகைக்கு ஐயமூட்டினாய் ! ஒழுக்கமுள்ள வாழ்வுக்கு ஒளியூட்டினாய் ! உன் பெயரை உச்சரித்தால் உதடுகள் மட்டுமல்ல உள்ளமும் இனிக்கிறது ! என் இருண்ட உள்ளத்தில் ஒளியேற்றியவள் நீ என்றாலும்-உனக்கு சூரியன் என பெயர் சூட்ட மாட்டேன்-அது மாலையில் மறைந்து போகும் நீயோ-என் உள்ளத்தில் உறைந்துபோனவள் ! என் உள்ளத்தில் பல வண்ணங்கள் காட்டி நல் எண்ணங்கள் வளர்த்தவள் நீ ! அதனால்-உன்னை வானவில் என வர்ணிக்கமாட்டேன் எப்போதாவதுதான் வானம் அதை நினைத்துப்பார்க்கும் நீயோ என்னுள் எப்போதும் நிலைத்திருப்பவள் ! பாவ துர்நாற்றத்தால் மனம் துன்பப்பட்டபோது நன்மை மனம் பரப்பியவள் நீ! அதனால்- உன்னை மல்லி என மகுடமிடமாட்டேன் அது வாடிவிடுவதால் நீயோ என் உள்ளத்தில் என்றும் வாடாமல்லி ! உள்ளம் வரண்டிருந்தேன் நீயோ மழையாய் வந்தாய் ! நான் குருடனாய் இருந்தேன் நீயோ கண்ணொளியாய் வந்தாய் ! நான் முடவனாய் இருந்தேன் நீயோ ஊன்றுகோலாய் வந்தாய் ! நான் பிணமாய் இருந்தேன் நீயோ உயிராய் வந்தாய் ! இப்போது மீண்டும் நான் பிணமாகிறேன் உனைப்பிரிந்து.... அன்னையே ! நான் இழக்கிறேன் என்னையே ! ஒரு நிமிடம்........... பிரிவில்தான் எத்தனை சுகம் "மை"க்கு பேனா அவசியம்தான் ஆனால் பேனாவுக்குள்ளேயே மை யிருந்தால் ? அதைப் பிரியும்போதுதான் மை உயிர்பெருகிறது. முத்துக்கு சிப்பி பாதுகாப்புத்தான் ஆனால் சிப்பிக்குள்ளேயே முத்திருந்தால் ? அது அணிகலனாகும்போதுதான் பிறவி பயன்பெருகிறது ! தாயின் கருவறை குழந்தைக்கு அவசியம்தான் ஆனால் கருவறையே வாழ்வானால் ? அதைப்பிரிந்த பிறகுதான் உலகை இரசிக்கிறது ! """பிரிவு""" பிறக்கும்போதே உடன் பிறந்தது அன்னையே ! உனைப்பிரிகிறேன் இயற்கை நியதிக்கேற்ப பன்னீர் தெளித்தல்ல கண்ணீர் தெளித்து..... ஃபக்ருதீன் ஃபாஸில்பாகவி
இந்த கவிப் புலமை
பதிலளிநீக்குகையறப் பெருவதர்க்கே
பாக்கியாத் அன்னையின்
மடி தனில் கல்வி பெரும்
பாக்கியம் கைவரப் பெறுதல் வேண்டுமே !
பக்ருதீன் எனும் மகா கவி
எம்முடன் தோழமை
கொள்ளவும் மாபெரியோன்
துணை வேண்டுமல்லவா !
அல்ஹம்து லில்லாஹ் !
ஆலிம்களில் தான் எத்துனை
ஆளுமைகள் !
அத்துணைக்கும் ஆலிங்கனம்
அடையப் பெற்றால் ஆலமும்
ஞாலம் பெருமல்லவா !
துணை செய்வாய் வல்லவா !
பதிவில் வந்த கவிதையை பாராட்டவா? கருத்துரையில் வந்த கவிதையைப் பாராட்டவா?
நீக்குஜஸாகல்லாஹ். வந்தமைக்கும், துஆ தந்தமைக்கும்.
நீக்கு